என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

புரிதல் பற்றி..


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...

புரிதல்..
என்னில் இருந்தான
உனது முடிவு..

நாவில் இருந்தான
வார்த்தைகளின் புரிதலை...
உண்மையில் இருந்தான
பொய்யின் புரிதலை...
ஆணில் இருந்தான
பெண்ணின் புரிதலை..
எதிலும் இருந்தான
அத்தனை புரிதல்களையும்..
வெறுமை நிரம்பிய
வெள்ளைத்தாள்களில்
விரல்கள் உதிர்த்துவிடுகின்றன....

எனக்கும் தெரியும்
உனது புரிதல் பற்றி..
நமது புரிதல் என்பது
போடப்பட்ட புள்ளியின் பின்
போடப்படும் அடையாளங்கள்...

புரிதல் என்பதைப் பொறுத்து
ஒவ்வொன்றும் வேறுபடும்...
ஆனால் இங்கு
புரிந்து கொள்வதற்கோ ஏதுமில்லை...
நம்மைத்தவிர...

தமிழ்நிலா
காற்றுவெளி February 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

ஒரு துளி மழை....


ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....

ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அண்டம்... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..

கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவர்...

சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்
ஒரு உலகப்போர்..
தண்ணீர் வேண்டி கண்ணீர்
கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
உலகப்போர்தான்...

களங்களில் வெற்றி நிச்சயம்
கழனியில் நட்டம் மட்டுமே
இப்போது மிச்சம்..
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...

பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....

தமிழ்நிலா

காற்றுவெளி 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

பின் குறிப்பு...


நடந்து போகையில்
கடந்திருந்தது ஒரு கல்..
அழைத்தது
கடவுளின் எச்சம் என்றது..

கல் எடுத்து சிலைவடித்து..
கருவறையில் சிறையிலிட்டு
கடவுள் என்று சொல்லிட்ட
கல்லின் எச்சம் அது...

ஊர்கொரு குடிலமைத்து
கோவில் என்று பெயருமிட்டு..
அண்டத்தை அடையாளத்துக்குள்
அடக்கிட நினைத்திட்ட
மடமையின் எச்சம் அது...

இன்னும் சொல்லிற்று...
கடவுள் என்னும் மனிதனின் 
பாசாங்கு சொலிற்று...
கருவறையில் கன்னியுடன்
காமுறும் கயவர்களை
நம்பும் எம் மடமை சொலிற்று...

கொட்டும் காணிக்கை
கோடியில் குறையவில்லை..
நிறையும் பைகள்
எதிலுமே குறைவில்லை....
கடவுளுக்கு முன்னாலே
பங்குகள் பிரிவதாய்
எல்லாம் சொல்லிற்று....

மணி ஒலித்தது
சிரித்தது அந்த கல்...
என்னவென்று வினவினேன்...
கடவுளின் உணவு நேரம் என்றது,

மணி அடித்திட உணவு
சிறையிருக்கும் கடவுளுக்கும்..
சொல்லி சிரித்தது...

நீ கூட கடவுள் தான்
உளியின் வலிகளை
பொறுத்துக்கொள்கிறாய்...
என்றேன்... மீண்டும்
மண்ணுக்குள் சென்று
உறங்கிக்கொண்டது...
ஏதும் சொல்லாமல்.....

பின் குறிப்பு- கடவுள் மனிதம் தொலைந்த அன்று  காணாமல் போய்விட்டார்...

தமிழ்நிலா
காற்றுவெளி February 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

ஒவ்வொன்றாய் கடந்திருந்தது..




கூட்டினை வெறுத்து காட்டினுள் 
சுகந்திரக் காற்றை சுவாசிக்க 
தயாராகிற்று ஒரு பறவை 
கம்பிகள் உடைத்து 
வானத்தில் இறக்கை விரித்தது..

பால் வாசம்,
பனையோலைக்காற்றாடி,
ஒரு சோடி வண்ணத்துப் பூச்சி,
வீதி நிறைந்த பாதச்சுவடு..
அச்சடிக்கப்பட்ட தாள்கள் 
மஞ்சள் கழுத்து..
பாலக வாசம் 
சொல் இழப்பு..
கைத்தடி, 
சக்கர நாற்காலி, 
வரவேற்பு வளையங்கள் 
பொருத்தப்பட்ட மயானங்கள்...
வீதியோரம் ஒற்றை மரம்..
சாய்ந்தபடி ஒரு கிழவி...
ஒவ்வொன்றாய் கடந்திருந்தது..
இறக்கைகள் கழன்றிருந்தது..

அழுகையும், சிரிப்பும் பரவிய
ஒலியடுக்குகளைக் கிழித்து..
திட்டுத் திட்டாக
கொட்டிக்கிதாக்கும்
மேகக்கூட்டத்தைக் கலைத்து

எல்லை கிட்டாத வானத்தை
முறைத்தபடி
பின் தொடர்ந்துகொண்டேயிருந்தது
தாய்ப் பறவை.
பின்னால் மகள்ப் பறவை.

தமிழ்நிலா
காற்றுவெளி April 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

புது யுகம் படைப்போம் ...

இந்த உலகை காக்க புது படை அமைப்போம்.. வரும் கயவரை அழித்து பாதை அமைப்போம்.. பாதையினுடு அலையாய் முன்னேறுவோம்... உலகைக் காக்க...!!


வாடா என் நண்பனே
புறப்படுவோம்
இந்த உலகத்தை நாமே
துடைத்திடுவோம்...!!

அழியா கனளகளை
அழித்துடுவோம்
வரும் கயவரை கொன்று
புதைத்துடுவோம்....!!

அனாதை இல்லை இனி
நாம் உறவாவோம்.
எம் அன்பை கொடுத்து
அடிமையாவோம்....!! 

ஊனம் ஓரு குறையல்ல
புரியவைப்போம்.
அது வாழ்வில் தடையல்ல
உணரவைப்போம்......!!

சாதி மத பேதம்
சுட்டெரிப்போம்..
இனி ஓரு பாரதியாய்
உருவெடுப்போம்....!!

வானுக்கும் மண்ணுக்கும்
பாதை அமைப்போம்..
தடைகளை வைத்து
படியாய் கட்டுவோம்...!!

தமிழர் எம் கலாச்சாரம்
காத்திடுவோம்..
மேல் நாட்டு மோகத்தை
விட்டெறிவோம்...!! 

பெண்களை கண்களாய்
பாத்திடுவோம்...
அடங்க மறுத்தால்
நாமே அடக்கிடுவோம்...!!

நீதிக்காய் என்றும்
குரல் கொடுப்போம்..
நீதி கிடைக்காவிட்டால்
நீதிபதி ஆகிடுவோம்...!!
வார்தையால் எல்லாம்
கூறிடுவோம்......

கேக்க மறுத்தால்.......

ஆயுதம் எடுத்திடுவோம்
உலகைக் காத்து
புது யுகம் படைக்க .....!!

தமிழ்நிலா 
காற்றுவெளி January 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...