என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

புதுத் தென்றல் போர்ப் பாதையில் புதையுண்டாள்..



மண்ணின் அடியில் ஒரு கீச்சுக்குரல்,
பையிலிருந்த பொம்மை — கதறியது.

உருக்குலைந்த எலும்புகளோடு
மௌன சாட்சியாக புதையுண்டிருந்தது
அந்தப் பொம்மை.

பொம்மையின் மொழி முடங்கிய போதும்,
நீள் உறக்கம் குளம்பிய விழிகளில்
நிழல்கள் மட்டும் பேசுகின்றன.
அதுவும் பார்த்திருக்கக்கூடாது அந்த பயத்தை.

பள்ளிக்குச் சென்ற அவள் புத்தகப்பை
குருதிக் கதைகள் வாசித்தது,
சப்பாத்துக்கள் சுடுகாட்டின் பாதை
எப்படி சென்றன எனச் சொல்லியது
அந்தக் கதை.

கடைசி சிரிப்பு அந்த மண்ணோடு கலந்திருந்தது
மண்ணின் மணத்தில் குழைந்திருந்தது
அவள் வாசித்த இறுதிக் கவிதை ஒன்று.
இப்போதெல்லாம் ஒரே புனித மௌனம்.

மௌனமாகப் பேசும் என்புகளிலிருந்து
“நான் கற்பழிக்கப்பட்டேனா?” என்ற கேள்வி,
பூமி பிளந்து விண்ணில் உறைந்தது —
பதில் எதுவுமின்றி…

மரணத்தின் மேல் விழித்தபோது 
பொம்மை மட்டும் சத்தமிட்டது.
பொம்மையின் விழிகளில் உறைந்திருந்தது
ஒரு கடைசி கண்ணீர்.

தோண்டப்பட்ட இடமொன்றில்
தொலைந்த காலத்தின் அழுகிய நிழல்கள்.
அவளின் பெயர் இன்றும் தெரியவில்லை,
ஆனால் அவள் பொம்மையின் குரல்

நம் இரவில் என்றும் கீச்சும் அந்தக் குரல்..

ச. 01.07.2025 | 11.47pm

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...