என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label குளோபல்தமிழ். Show all posts
Showing posts with label குளோபல்தமிழ். Show all posts

ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...


மரண நதிகள்
சலசலத்துக் கொண்டன..
பிணம் தின்னிக் கழுகுகள்
மரங்களில் வந்தமர்ந்தன..
இருட்டில் கரைந்துவிடுகின்றது
மெழுகுதிரியின் சுவாலை...

கருமேகக் கூட்டங்களை
இந்த மரத்தின் இலைகள்
வீசிக்கலைக்கின்றன...
பழுத்திருந்த காய்களில்
துரோகம் பூத்துக் காய்ந்திருந்தன...
இடைவெளிகளின் ஊடே மானிடம்
மூர்ச்சையற்றுக் கிடக்கிறது..
புலன்கள் திரிபடைந்து,
ஆறு ஐந்தாகி எதுவோ
ஆகியிருந்தது மனிதம்...

கேட்டதும்  கேக்காததுமான
சில சத்தங்களை
சேர்த்தும் சேர்க்காமலும்
இசைத்துக்கொண்டிருந்தன
சுடலைக்குருவிகள்...

ஊர்க்குருவியின் ஓலத்தில்
ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...

மயானமாக்கப்பட்ட வெளிகள் எங்கும்
நிறைகின்றன வலிகளைத்
தாண்டி செல்லும் இவ் இசை..

சலனமற்ற இரவில்
சரித்திரங்களை மாற்றி
ஆதி இனமொன்று
அந்நாளில்
சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது...
சிதறடிக்கப்பட்டிருந்தது...

சிதறிய கார்த்திகைப்பூக்கள்
மீண்டும் கருக்கொண்டன
சாம்பல் மேடுகள் எல்லாம்
மீண்டும் பச்சையாகின....
இரும்புகளும் தகரங்களும்
தங்கம் ஆகின..
இப்போது காற்றில் முழுவதும்
வியர்வையின் வாசம்..
மீண்டும் வீசி அடிக்கலாயிற்று...
அதே தேசத்தின் தென்றல் காற்று..

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...