மண் கல்லாகி இருந்தது
கிளுவைகள் மதிலாகி இருந்தன..
கிடுகுகள் ஓடாகி
திண்ணையை மறந்து
விண்ணையே தொட்டிருந்தன
நகரத்தின் வீடுகள்...
வரவேற்பறையிலே
கண்ணாடி அலுமாரிகளுடன்
நீண்ட கட்டில்கள்..
எல்லாப்பக்கமும் நோக்கியவாறான
சுவர்களில் சாமிப்படங்கள்..
படங்களுக்கு கீழே
செருப்பு வைக்கும் மேசை..
புகை போக்கி இல்லாத
சமையலறைகள்...
பதப்படுத்தப்பட்ட உணவு..
மின்னை மட்டும் நம்பிய காற்றாடிகள்..
விலை நிர்ணயிக்கப்பட்ட குடிநீர்..
பொம்மைகளை மட்டுமே
நண்பராக கொண்ட குழந்தைகள்..
மண் மறந்த சாடிக்குள்
நிமிர்ந்திருந்த பூ மரங்கள்...
ஒரு கிராமமே அடங்கியிருந்தது
இந்த நகரத்தின்
ஒற்றை வீட்டுக்குள்....
இருப்பினும்
புதையுண்டுபோன கிராமத்தின்
மொத்த வரலாறு மட்டும்
எங்காவது ஒரு வீட்டின்
மூலையிலாவது குனிந்து
சிரித்துக்கொண்டிருக்கும்...
இது போன்ற
கறுப்பு வெள்ளை
புகைப்படங்களாய்...
தமிழ்நிலா
3 comments:
arumai!
உண்மையான நிகழ்வுகள்
மிக அழகு ......
நன்றி.. நன்றி....
Post a Comment