என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

என்ன கனவிது..??


என் கனவுகள் வித்தியாசமானவை
விசித்திரமானவையும் கூட

மேகமே இல்லா இடத்தில்
மழை பொழிவது போலவும்,
காற்றே இல்லா இடத்தில்
புயல் வருவதை போலவும்..
இருக்கும் என் கனவுகள்...

கடலில் இருந்து மலைகளுக்கு
அருவிகள் ஓடுவது போலவும்
வானில் இருந்து பூமி நோக்கி
நிலா வருவது போலவும்
இருக்கும் என் சில கனவுகள் ..

இராணுவ வீரர்களின்
சட்டைப்பைகளில் காந்தி...
காந்தீயவாதிகளின்
கைகளில் கத்திகள்...
பாலைவன வெயில்
வெறுங்காலுடன் சிறுமி...
திடீர் என மழை..
எங்கிருந்தோ முளைவிடும்
பசும் புற்கள்...
அடிக்கடி வந்துபோகிறது ...

எதோ ஒரு போர்
வானில் இருந்து தட்டுக்கள்
இருண்டு விடுகிறது பாரே..
சத்தம் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கும்..
நாடு இரவில் பயமுறுத்தும்...

ஊருக்கு ஒரு மரம்..
அருங்காட்சியகத்தில்
ஒரு குவளை நீர்...
சோறு அடைத்த பைகள்..
நிர்வாண மிருகம்..
அச்சடிக்கப்பட துண்டுக் காகிதம்..
சுண்டுவிரலில் இணையம்..
சூனியமான ஏதோ ஒன்று..
தொடராத அதிகலைக்கனவிது....

ஒற்றை இறகு வண்ணாத்து பூச்சி...
கொம்பு முளைத்த மனிதன்..
அங்கும் இங்குமாய் கிழிந்த துணிகள்...
பூக்களில் இரத்தம்..
துப்பாக்கியில் கண்ணீர்..
அடிக்கடி பகிரப்படும் சில உருவங்கள்..

என்ன கனவிது..??

என் கனவுகள் விசித்திரமானவை
விளங்கிக்கொள்ள முடியாததும் கூட...

தமிழ்நிலா
காற்றுவெளி December 2013

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விசித்திரமாகத் தான் இருக்கு... ஆனால் ரசிக்கத்தக்கவை...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்

கவிதை மனதை கவர்ந்தது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...