என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

மரணம் பற்றி இரண்டு.....
01. இதற்கு தான் ஏற்பாடா...?

சுற்றம் கதறி அழுது 
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும் 
சுமை தாங்கி சரிந்திருந்தது...

நெஞ்சம் கரைந்திருக்க 
வாய்ப்பில்லை - ஆனால் 
முந்தானைகள் நனைந்திருந்தன..

அழாவிட்டால் வேஷம் 
கலைந்து விடும் என்று 
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...

பிணம் என்று 
பெயர் மாற்றப்பட்டிருந்தது..

வரவு செலவு அன்று தான் 
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...

செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...

அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிக‌ளும் கேக்கிறது...

பார்த்து பொறுக்காமல் 
பேழைக்குள் இருந்து எழுந்து விட 
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....

கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..

மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....

புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?
***

02. மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

உறக்கம் மரணத்தின் ஒத்திகை..
மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...

மரணம் நீண்ட பயணத்தில் 
நிரந்தர ஓய்வு... 
மரணம் கொடிய ஒருவழிப் பாதை..

மரணம் கற்பனைகள்  இல்லாத
முதல் நாள்...

மரணம் எம்பின்னால் தான் 
நடக்கிறது...
சிலருக்கு முன்னாலும் கூட...
மரணம் மனிதர்கள் போல்
முகபாவங்களை மாற்றிக்கொள்ளும்...

பயந்துவிடாதீர்கள்
பயந்தாலும் விடவா போகிறது...??

மரணத்தை நண்பராக
ஏற்றுக்கொள்ள யார் தயார்...?

இருந்தும்...
மரணம் நண்பராக்கி விட தான்
நினைக்கிறது....
***

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

Anonymous said...

அர்த்தங்கள் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள்

Ramani said...

இரண்டு கவிதைகளும் மிக மிக அருமை
மனம் தொட்டப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

sanjay தமிழ் நிலா said...

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...