என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

அப்பா எந்நாளும் என் முகவரிதான்..




அப்பாவுக்கும் எனக்குமான
ஆரம்பகால ஊடகம்
கண்கள் மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

அப்பாவின் முதுகில் இருந்து
உலகத்தைச் சுற்றினேன்..
அப்பாவின் தோளில் ஏறி
உலகத்தை அளந்தேன்.....
அப்பாவின் கை பிடித்து
நடந்த போதுதான் உலகத்தை படித்தேன்..

நடந்துகொண்டிருக்கையில்
எதிர்த்திசையில் போய்க்கொண்டிருந்தது
அப்பாவின் கடந்தகாலம்...
அப்பா இன்னொரு தாய் தான்..
தன் உழைப்பால் எனை செதுக்கியவர்...

அப்பாவிடம் இருந்து
வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்...
இல்லை
வாழக் கற்றுக்கொண்டேன்..

எப்படி வாழவேண்டும் என்று அல்ல
இப்படித்தான் வாழவேண்டும் என்று
கற்றுத்தந்தவர் அப்பா...

வறுமையிலும் எளிமையாய்..
எளிமையிலும் கொள்கையுடன்..
கொள்கையுடன் செழிமையாய்...

அம்மா தினம் தினம்
திட்டினாலும் உறைத்ததில்லை,
அப்பாவின் ஒரு வார்த்தை
உடனேயே உறைத்திருக்கிறது...

"அப்பா ஒரே புராணம்டா "
என நண்பர்களிடம் புலம்பையில்
உனது தந்தை போல் எங்களுக்கு
இல்லையே என்று
நண்பர்கள் சொல்லும்போது
தான் தெரிந்தது,
என் தந்தை எனக்கு மட்டும்
கிடைத்தவர் என்று..

கடவுள் கேட்டாலும்
கொடுப்பதில்லை...
அப்பா
கேட்ட உடனே கொடுக்கும்
கடவுள்....

என் கரம் பிடித்து
நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்..?
அப்பாவின் கனவுகள் ஏராளம்..

அதிகமானவரின் கனவுகள்
நிஜமாவதில்லை தானே..

உழைத்து களைத்துவிட்டன
அப்பாவின் கால்களும்
அப்பாவின் சைக்கிளும்....
வியர்வை பட்டதால்
சைக்கிள் துருப்பிடித்து விட்டது..
அன்பு இன்னமும் பளபளக்கிறது...

என் முன்னால்
என்றுமே சொன்னதில்லை,
அம்மா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
பேசிக்கொள்வதை...

எனது வாழ்க்கையில்
வெற்றிடம் அப்பாவால் இல்லை..
என்னால் தான் அவரிடம் சில
வெற்றிடங்கள்....
அப்பாவைப் போல் யார்
எனக்கென்று இருக்க முடியும்..

வெளிப்படையாக
நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் காதலை..

அப்பா எந்நாளும் என் முகவரிதான்..

அப்பாவுக்கும் எனக்குமான
ஊடகம் பார்வை மட்டுமே..
பார்வையாலே எல்லாம்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...
இன்றுவரை....


தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

5 comments:

தனிமரம் said...

அப்பா என்றால் ஊடகம் போல!ம்ம் கவிதை மனதை வருடுகின்றது!ம்ம்

ஆத்மா said...

அழகான கவிதை ரசித்துப் படித்தேன்.
அப்பா அப்பாதான்......

Sanjay Thamilnila said...

நன்றிகள்

Anonymous said...

அருமையான கவிதை சகோ. அப்பாவின் விம்பம் தான் நாம் என்பதை மறுக்க முடியாது !!! தந்தையே மகனாகி என்று சொல்வார்களே !!!

நமது முதல் வியப்பு அப்பா தான் ! முதல் ஹீரோ அப்பா தான் .. ஆனால் வளர்ந்த பின் அவற்றை மறந்துவிடுகின்றோமே !!!

Sanjay Thamilnila said...

நன்றி உங்கள் கருத்துக்கு.. உண்மைதான். அது தான் ஏன் என்று புரியவில்லை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...