
சாமி வலம்வந்த இரண்டு சக்கர தேர்.
தாரில் தவழும் நான் பார் பார்த்த
புட்பக விமானம்...
அதே சைக்கிள் அதே அப்பா
அன்றும் இன்றும்..
ஆரம்பத்தில்
அம்மாவின் மடிதான்
வானம் மட்டும் பார்த்தேன்..
நாட்கள் நகர எனக்கென்று
ஒரு இருக்கை...
கைபிடியில் கொளுவி
சிம்மாசனம் போல் இருக்கும்
என் பின்னல் கதிரை..
நாளாக முன் இருக்கை எனதானது...
அப்பாவின் சைக்கிளில் இருந்து
உலகம் பார்த்தேன்.
என் முதல் பயணம்..
எனக்கு ரசிக்க பழக்கியது
பல கதைகளை சொல்லும்
என் ஒவ்வொரு பயணங்களும்..
உல்லாச பிரயாணி நான்
வழிகாடி அப்பா...
எம்மை போல அதனிலும்
ஒரு பார்வை எப்போதும் இருக்கும்..
பூசி மெழுகி தேவதை போல
பார்த்துக்கொள்வார்...அப்பா
எங்கள் பள்ளிக்கு வரும்
உறவினரின் இன்ப துன்பத்தில்
கலந்து கொள்ளும்..
உடமைகளை காவிச்செல்லும்
போர்காலத்திலும் எம்மில் ஒன்றானது...
சைக்கிளுடன் காலமும் ஓடிவிட்டது...
நான் சற்று மாறியிருந்தேன்...
அதே சைக்கிள் அதே அப்பா
ஆனால் வேர்வை படிந்தும்
துருப்பிடிக்கவில்லை மிதிகள்,
மிதித்த கால்கள் சற்று தளர்ந்திருந்தன...
மணி ஓசை அப்படியே,
குரல் ஓசை குறைந்து விட்டது..
பற்றிய கைபிடிகள் ஓடிய சக்கரங்கள்
இன்னும் மின்னிக்கொண்டது..
பார்வை மங்கிக்கொண்டது...
காணமல் போய்க்கொண்டிருக்கும்
அப்பாவின் சைக்கிளும்
காணமல் போய்விட்டது
அன்றொருநாள்.....
தமிழ்நிலா
காற்றுவெளி November 2013



Tody Now
3 comments:
சிறு வயது ஞாபகம் வந்து, மனம் கலங்கித் தான் போனது...
வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை கடந்த கால ஞாபகம்.....நெஞ்சை அள்ளியது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Post a Comment