என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

நடராஜா ரவிராஜ்


திரு.நடராஜா ரவிராஜ் எமது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரிய படுத்திய ஒருவர். இவர் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். M.G.R இனால் ஈர்க்கப்பட்டு அரசியலில் புகுந்த இவர் காந்தீயத்தை மிகவும் நேசித்தார் என்பது பெருமையானது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாக June 25 1962 இல் பிறந்தார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் தன்னை  சட்டத்தரணியாக பதிவு செய்தார். 

ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. ஏழைகளுக்காக இலவசமாக வாதிட்ட ஒரு மனிதநேயம் உள்ள இவர், கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார்.

  • 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 
  • 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 
  • 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
  • 2004 ஆம் ஆண்டு சர்வதேச அமைதிக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைதி சபை ஆகியவற்றின் சார்பில் அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 
அமரர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப் பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான் இருப்பினும் அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்ப தற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். ஒவொரு சக மனிதனின் கருத்துக்கும் களம் கொடுத்தார். 

அழிந்துபோன எமது சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பணம் போதாமையால். தனது ஊதியத்தையே நன்கொடையாக வழங்கினார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒருவரானார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த  அவர் அவற்றினை கையாண்டு தனது கருத்துக்களைக் எல்லோருக்கும் சென்றடையவைத்தார். எமது பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களை பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை பயன்படுத்தி தமிழர் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

படுகொலை 

நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு வருகையில் வீட்டுக்கருகில் வைத்து அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வேகமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 44. இதன் போது அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டார்.


சம்பவத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், தலைப்பகுதியில் ஏற்பட்ட கடும்காயம் காரணமாக அவர் இறக்க நேரிட்டதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

ரவிராஜின் உடல் இரத்மலானை விமான நிலையமூடாக யாழ் பலாலி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது, யாழ் மாநகர சபை மணடபத்தில் பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் சாவகச்சேரியில் அவரது பாடசாலை, இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரையில் வைக்கப்பட்டது.ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது இறுதி வணக்கத்தை மாமனிதர் ரவிராஜூக்கு செலுத்தினர். வணக்க நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமை தாங்கினார். வணக்க உரைகளை மதகுரு வசந்தகுமார் அடிகளார்,  மாவை சேனாதிராஜா, துரைரட்ணசிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், செ.கஜேந்திரன், அரச அதிபர் கே.கணேஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து மகஸின் சிறைச் சாலைக் கைதிகள் வரைந்து அனுப்பிய கண்ணீர்க் கவிதையும் அங்கு படிக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதி யாத்திரை ஆரம்ப மாகியது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட பூந் தண்டிகையில் பேழை வைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும், உறவினர்களும் அதனை மயானம் வரை சுமந்து வந்தனர். சுமார் ஒரு மைல் நீளத்துக்கு இறுதி யாத் திரையில் மக்கள் திரண்டு சென்றனர். சரியாக 12.45 மணியளவில் கண்ணாடிப் பிட்டி இந்து மயானத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. 1.30 மணிக்கு சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. உறவினர்களும், நண்பர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கதறி அழ மாமனிதரின் உடல் தீயுடன் சங்கமித்தது.

மறைந்த நடராஜா ரவிராஜூக்கு நவம்பர் 11, 2006 அன்று தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது.

ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

அந்த இறுதி நேர்காணலை வாசிக்க இங்கே அழுத்தவும்


ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை நவம்பர் 13, 2006 நடைபெற்ற பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இப் பேரணியில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த அரசியல், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவில் வைத்து சிங்கள முஸ்லிம் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு இருந்த ஆதரவு புலனானது.

அனைத்து பிரிவினர்களாலும் ஈர்க்கப்பட்ட ஒரு மனிதனாக இவர் இனம் காணப்படுகின்றார்

நடராஜா ரவிராஜ் அவர்களின் மறைவு குறித்த ஜனாதிபதியின் இரங்கற் செய்தி

Mahinda--President.jpg
திருமதி நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு உங்கள் அன்புக் கணவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்கள் குரூரத்தனமாக சுட்டுப் படு;கொலை செய்யப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்தைக் கேள்வியுற்று நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். தான் மதிக்கும் அரசியல் கொள்கையை நேரடியாகப் பிரதிபலித்த மக்கள் பிரதிநிதியொருவர் என்ற வகையில் திரு. ரவிராஜ் அவர்களைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்ததுடன், ஒரு நெருங்கிய நண்பனாக அவருடன் உரையாடும் பாக்கியங்களும் அண்மைக் காலத்தில் எனக்குக் கிட்டியது. ஜனநாயகம் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருந்த சந்தர்ப்பமொன்றில் தமது உயிரையும் துச்சமாக மதித்து யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்காகப் போட்டியிட்ட இளம் அரசியல் வாதியான திரு. ரவிராஜ் அவர்கள், அரசியல் வானில் மிகவும் அரிதான பாத்திரமொன்றை வகித்த செயற்திறமையான மக்கள் தலைவராவார்.

அதே போல சரளமான எளிய நடையில் சிங்கள மொழியைக் கையாண்டு சிங்கள மக்களிடம் தமது கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கிருந்த பாராட்டத்தக்க ஆற்றலை கௌரவப்படுத்தும் முகமாக, தெற்கின் சிங்கள மக்களிடையே மிகவும் பிரபலமான தமிழ் அரசியல்வாதியாகவும் அவர் திகழ்ந்தார் என்பதையும் நான் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

2001ம் வருடத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாகப் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட அன்னார், அதன் பின் வந்த காலப்பகுதியில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து, அவர்களி;ன் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போராடுவதில் முன்னின்றவர்.

வட-கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றின் அவசியம் குறித்து சதாவும் பாராளுமன்றத்தினுள் குரல் கொடுத்து வந்;த அவர், வட-கிழக்கு நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும் இன்னல்களுக்கு எதிராகவும் போராட்டத்திலீடுபடுவதில் வழங்கிய உன்னதமான சேவையை எம்மால் மறந்து விட முடியாது.

மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த ஒரு சட்டத்தரணியுமான திரு. ரவிராஜ் அவர்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராகவுமிருந்து இந்நாட்டின் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைத்தவர் என்பதை இச்சோகமான சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடன் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அரசியல் படுகொலையை யார், எந்த சக்தி மேற்கொண்டிருந்தாலும், அது அடுத்தவர்களின் கருத்துக்கள் மற்றும் ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய அரசியல் சுதந்திரம் என்பவற்றுக்கெதிராக மேற்கொண்ட கேவலமான செயலாகுமென்பதுடன், அதனை நானும் இலங்கை அரசாங்கமும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் ஜனநாயகத் தமிழ் அரசியல் வரைபடத்தில் இதன் மூலம் ஏற்படக்கூடிய இடைவெளியை நிரப்புவது மிகவும் கடினமான விடயமாகும் என்பதை நான் மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளேன்.

மேலும் திரு. ரவிராஜ் அவர்களின் படுகொலை பற்றிய உண்மையான தகவல்களை மக்கள் மத்தியல் சமர்ப்பிப்பதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ள உள்ளதையும் துயரம் மிக்க சந்தர்ப்பத்தில் உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள நான் விழைகிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. நடராஜா ரவிராஜ் அவர்களின் இறப்பால் ஆறாத்துயருற்றிருக்கும் உங்களுக்கும், அன்புக்குரிய புதல்வி பிரவீணா மற்றும் புதல்வர் உதீஷ்ரம் உட்பட குடும்பத்தின் அனைத்து உறவினர் நண்பர்களுக்கும், அன்னாரது அரசியல் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், உங்களுடைய எவ்வகையான எதிர்காலத் தேவைகள் தொடர்பாகவும் தயங்காது முன்வந்து ஒத்துழைப்பை நல்குவதற்கு என்னுள் இருக்கும் தோழமையுணர்வையும் இச்சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விழைகின்றேன்.

காலஞ்சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்தின் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.

– மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதி . இலங்கை 2006 நவம்பர் 12ம் திகதி

அன்புடன் 
தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...